Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

``ரூபாய் நோட்டிலிருக்கும் கிருமிகளை இதன்மூலம் அழிக்கலாம்!" - அரசுப்பள்ளி மாணவி வடிவமைத்த கருவி

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் நோய்களைப் பரப்பும் தன்மையைக் கொண்ட 78 வகையான கிருமிகள் இருக்கின்றன என்று கூறும் ஆய்வறிஞர்கள், நம் வீட்டு கழிவறைகளில் இருக்கும் கிருமிகளைவிட பலமடங்கு அதிகமான கிருமிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் குடியிருக்கின்றன என்றும் கூறுகிறார்கள். 





அதனால் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தியப் பின் சோப்பு போட்டுக் கைகளைச் சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், புற ஊதாக் கதிர்கள் மூலம், ரூபாய் நோட்டுகளின் மீதுள்ள கிருமிகளை அழிக்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள் அதை எளிமையான முறையில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இந்நிலையில், புற ஊதாக் கதிர்களின் மூலம் எளிமையான முறையில் இதற்கான தீர்வை முன்வைக்கிறார் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்திருக்கும் குப்பநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சத்யா. புற ஊதாக் கதிர்களின் பல்புகளின் மூலம் ரூபாய் நோட்டுகளில் படிந்திருக்கும் கிருமிகளை 7 விநாடிகளில் அழிக்க முடியும் என்று கூறும் மாணவி சத்யா, இந்தச் சாதனம் மனித உடலில் நேரடியாகப் படாதவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார். தொடர்ந்து நம்மிடம் பேசிய மாணவி சத்யா, ``நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு விதமான கிருமிகள் இருக்கின்றன. ஆனால், அதுகுறித்த அறியாமல் இருக்கும் நாம், இன்னும் நாக்கில் எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.


அதேபோல, கொரோனா வைரஸ் இரண்டாம் அலை முடியும் நிலையில் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். பல வழிகளில் பரவும் கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகளின் மூலமாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். நம் உடலில் இருக்கும் கிருமிகளை சோப்புகளைக் கொண்டு அழித்துவிடலாம். ஆனால், ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கிருமிகளை எவ்வாறு அழிப்பது?

இது பற்றி எங்கள் அறிவியல் ஆசிரியர் தமிழ்க்கனியிடம் கேட்டேன். அப்போது, புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமிகளை அழிக்க முடியும் என்று தெரிவித்தார். அதன் பிறகு, புற ஊதாக் கதிர்கள் குறித்து கூகுளில் தேடியபோது, அந்தக் கதிர்களால் எங்கிருக்கும் கிருமிகளையும் அழிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டேன். பிறகு, புற ஊதாக் கதிர்கள் மூலம் ரூபாய் நோட்டுகளில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று எங்கள் ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் உற்சாகப்படுத்த, `கொரோனா ஃப்ரீ பாக்ஸ்'-ஐ வடிவமைத்தோம்.

மரத்தினால் செய்யப்பட்ட இந்தப் பெட்டியின் கீழ் பகுதியில் புற ஊதா பல்புகளை பொருத்திவிட்டு, மேல் பகுதி முழுவதும் கண்ணாடிகளை பொருத்தியிருக்கிறோம். புற ஊதாக் கதிர்கள் கண்ணாடியின் மீது பட்டு எதிரொளித்து ரூபாய் நோட்டுகளின் மீது விழும்போது கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்.

அந்தப் பெட்டி மூடிய நிலையில் இருக்கும்போது மட்டுமே பல்புகள் ஒளிரும்படி வடிவமைத்திருக்கிறோம். ஏனென்றால் அந்த ஒளிக்கதிர்கள் நம் உடலின் மீது அல்லது கண்களில் பட்டால் பின்விளைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த முறையில் வெறும் 7 நிமிடங்களில் ரூபாய் நோட்டுகளிலுள்ள கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். இந்தப் பெட்டியின் செயல்பாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் ஆய்வு செய்து அதிக பணப்பரிமாற்றம் நடக்கும் வணிக நிறுவனங்களில் வைக்க வேண்டும் என்பது என் கோரிக்கை' என்கிறார்.

ஆசிரியர் தமிழ்க்கனியிடம் பேசினோம். ``எங்கள் மாணவர்களுக்கு படிப்பைத் தாண்டி அவர்களின் படைப்புகளையும் ஊக்கப்படுத்துகிறோம். எங்கள் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் மாவட்ட அளவில் மட்டுமல்லாமல் தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் அங்கீகாரங்களைப் பெற்றிருக்கின்றன. மாணவி சத்யா ரூபாய் நோட்டுகளில் உள்ள கிருமிகள் குறித்து கேள்வி எழுப்பியதால் உருவானதுதான் `கொரோனா ஃப்ரீ பாக்ஸ்'. அனைத்து கிருமிகளுக்கும் பொதுவானதுதான் என்றாலும், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்தப் பெயரை வைத்திருக்கிறோம்'' என்றார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் பெருகட்டும்!

Dailyhunt

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3BqIxb0
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments