நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அக்.12-ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின் 2-வது அலையால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் தொற்றின் பரவல் குறைந்ததால், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்.1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் உள்ளதால் நவம்பர் 1 முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் தொடர்பாக அக்டோபர் 12ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், கல்வித்துறை இயக்குநர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் துறை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். சென்னை டிபிஐ வளாகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது, பொதுத் தேர்வுகளுக்குத் தேவையான தேர்வு மையங்கள் அமைப்பது, அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பன குறித்த தகவல்களை கல்வி அலுவலர்கள் எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் மாதம் எத்தனை பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன என்றும் பள்ளிகள் திறப்புக்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா என்பது குறித்த தகவல்களையும் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3DdoRY0
via IFTTT
0 Comments