இரண்டு நாள் பயணமாக தனி விமானம் மூலம் டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இன்று மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் சென்றார். அவருடன், அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர்.
தமிழகத்தின் நலன் சார்ந்த 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பிரதமர் மோடியுடனான முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு 25 நிமிடங்கள் வரை நடைபெற்றது. சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரான பிறகு முதல் முறையாக டில்லி வந்து இருக்கிறேன்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கறுப்பு பூஞ்சை தடுப்பு வேண்டும். கொரோனா பேரிடர் நிதி மற்றும் நிலுவை ஜி.எஸ்.டி தொகையை வழங்க வேண்டும் என, பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
அத்துடன், மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும்.நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
மேலும், புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்" என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3iUg9Y5
via IFTTT
0 Comments